மருவி நின்ற தலமதுதான் விசுத்திவீடு
மகத்தான அறுகோணம் நன்றாய்ப்போட்டு
திருவிந்த அறுகோணஞ் சுத்திநல்ல
தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு
குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங்
குணமான அக்கோட்டை நடுவிலேதான்
உருவறிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி
உத்தமனே வங் கிலி யங்கென்று போடே.
போட்ட பின்பு மனதுகந்து மனக்கண்சாத்தி
பூரணமாய் வங் கலி யங்கென்றிட்டு
நாட்டமுடன் தானிருந்து ஒரு நூறு மைந்தா
நன்மையுடன் தான் செபித்து நயனமேவி
தேட்டமுடன் குருபதியில் சென்று பாரு
சிவசிவா வாயுவேக லகிரியுண்டாம்
வாட்டமில்லா லகிரியடா வாயுவேகமாகு
மகத்தான யோகசிவ போதமாமே.
ஆமப்பா யோகமென்ற சிவயோகந்தான்
அருளான முச்சுடரின் அந்தத்தாலே
ஓமப்பா முச்சுடரின் அந்தம்பார்த்தால்
ஒளிவிளக்காய் நின்றதொரு மூலத்தீதான்
வாமப்பா நிறைந்ததொரு மூலத்தீதான்
வளர்ந்துதடா அறுகோண வரையின் மேலே
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்ப்பாரு
நாதாந்த மயேஸ்வரத்தை காணலாமே.

- அகத்தியர்