காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன்
கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு
தோணவே பிறை மூன்றாம் பிறைபோற்கீறித்
துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு
பேணவே நிறமதுதான் பளிங்குபோலாம்
பிறைமூன்றாம் பிறை நடுவே மகாரமிட்டு
பூணவே சங்கிலி மங்கென்றேதான்
பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே.
கார்க்கவுரு செபித்து நடுப்புருவமதில்
கண்ணுமனக் கண்ணாலே நன்றாய்ப் பார்த்தால்
மார்க்கமுடன் லட்சுமியும் விஷ்ணுதேவர்
மகத்தான பூரணச்சந் திரன்போல் மைந்தா
யேர்க்கையுடன் இருதயத்தில் காணும்பாரு
இன்பமுள்ள தெரிசனத்தைத் கண்டாயானால்
தீர்க்கமுள்ள சிவயோக வாழ்வு பெற்று
செல்வபதி யாயிருப்பாய் தினமும் நோக்கே.
நோக்குவது பூரணச்சந் திரனைநோக்கு
நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
மூக்குநுனி யந்தமதில் வாசிநின்று
நலங்காமல் தீபமதில் நாடும்பாரு
வாக்குமன தொன்றாகி நின்றுபாரு
மக்களே கன்பசுவு வாழ்வுண்டாகும்
தூக்குமென்ற கொடுமைதனை அகற்றிமைந்தா
சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே.

- அகத்தியர்