மூலாதாரம்



கேளப்பா விபரமென்ன மூலாதாரங்
கிருபையுடன் கண்டுகொள்ள வகையைக்கேளு
காலப்பா தோன்றிநின்ற மூலாதாரம்
கருணையுடன் சொல்லுகிறேன் அண்டம்போலாம்
மேலப்பா அண்டமதிற் சூழ்ந்துநின்ற
விசையான இதழதுதான் நாலுமாச்சு
சூளப்பா நிறமதுதான் மாணிக்கம்போல்
சுகமாக நின்றுதடா மூலம்பாரே.
பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே
பதியான அகூரந்தான் ஓங்காரமாச்சே
நேரப்பா நின்று ஓங் காரத்தோடே
நிசமான ரீங்காரம் உகாரங்கூட்டி
சாரப்பா தன்மனமே சாஷியாக
தன்மையுடன் தானிருந்து செபிப்பாயாகில்
காரப்பா கணபதியும் வல்லபையுமைந்தா
கனிவான உந்தனிடம் கனிவாற்காணே.
காணடா கனிவாகக் கண்டாயானால்
கருணையுள்ள சிவலோகம் உறுதியாச்சு
பூணடா சிவலோகம் உறுதியானால்
பொற்கமலம் உச்சியிலே தீபங்காணும்
பேணடா தீபமதை தினமும் நோக்கிப்
பிசகாமல் வாசியிலே பிலமாய்நில்லு
தோணடா அவ்வாசிப் பிலமாய் நின்றால்
சுகசீவ பிராணகலை சுத்தமாச்சே.
- அகத்தியர்

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே
- திருமூலர்

அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பார்
அதிலே யோர்கோணத் திலுகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கிய தோர்முனை யொன்றில் கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ்க் குண்டலியாம் சக்தி
பெண்பாம்பு போல்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையூ டுருவி நிற்பாள்
துரியாதீ தம்மென்ற வவத்தை தானே
- போகர்